இந்தியா-சீனா முரண்பாடு :அபாயகரமான புரிதல்
கட்டுரை ஆக்கம்: தோழர் பாஸ்கர்
அண்மைக் காலமாகவே இந்தியா-சீனா முரண்பாடு பற்றி பேசப்பட்டு வருகின்றது. அது உண்மையும்கூட....
இந்தியா மீது போர் தொடுக்கும் என்று எழுதும் அளவிற்கு சென்றுவிட்டது. பாதுகாப்புத்துறை விவகாரங்களை பற்றி எழுதும் ஒரு ஆய்வாளர் சென்ற மாதம் இதை எழுதியேவிட்டார். இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகிறது, இதை எப்படி தீர்ப்பது, இதை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றிய அபாயகரமான புரிதல்கள் உருவாகியுள்ளன.
இந்தியா-சீனா விற்கும் இடையிலான முரண்பாடு தத்தமது நாடுகளின் நலன் சார்ந்தே ஏற்படுகின்றது. அந்த நலன் மக்களின் நலன் அல்ல. மாறாக ஆளும் வர்க்கங்களின் நலனே. இன்றைய சீனாவானது மாவோ காலத்திய சீனா அல்ல. அது சீனாவின் பெரும்பான்மை மக்களுக்கான சீனாவும் அல்ல. சீனாவின் மக்களை கொடூரமாகச் சுரண்டித் தொழிலாளர் நலன்களை பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாத பாசிசம்தான் அந்த நாட்டை ஆண்டு வருகிறது. தொழிற்சாலைகள் என்ற பெயரில் வியர்வைக் கூடங்களில் (Sweat Shops) தொழிலாளர்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் மூலம் கிடைத்த, கிடைக்கும் உபரியை மூலதனமாக்கி அமெரிக்காவுடன் உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் இறங்கி உள்ளது. அதன் அங்கமாக தெற்காசியாவில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக உள்ள இந்தியாவுடனும் முரண்பாட்டில் உள்ளது.
இந்தியா-சீனா முரண்பாடு என்பது எல்லாஅரங்குகளிலும் வெளிப்படுகிறது. அது எல்லைச் சிக்கல், திபெத், ஈழச் சிக்கல் உள்ளிட்ட இலங்கை, நேபாள மாவோயிஸ்டுகள் மீதான அμகுமுறை உள்ளிட்ட நேபாளம், பாகிஸ்தான், மியான்மர், பங்களாதேஷ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Sco- shanghai Co-operation Organisation),ஆசிய வளர்ச்சி வங்கி (ADB – Asian Development Bank)இந்தியாவில் சீனாவின் தொழிற்துறை முதலிடு சீனப்பொருட்களின்இறக்குமதி (NSG – Nuclear Suppliers Group) இராணுவ முஸ்தீபு ஆகிய அரங்குகளில் வெளிப்படுகிறது.
இரண்டு நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் நோக்கமே மக்களைச் சுரண்டி மேலாதிக்கம் செய்வதே ஆகும். அவ்வாறு உள்ள நிலையில் குறிப்பிட்ட ஒரு ஆளும் வர்க்கத்தின் நலன் இன்னொரு ஆளும் வர்க்கத்தின் நலனுடன் முரண்படும்போது அது கூர்மையடைகிறது இது பொதுவானது. இந்த நிலையில் இந்திய ஆளும் வர்க்கம் மேற்கொண்ட அணுகுமுறைதான் இந்த முரண்பாட்டை கூர்மைப்படுத்தத்தொடங்கியது.
இந்தியா 1975ல் சிக்கிமை பலவந்தமாக இணைத்தது முதற்கொண்டு 2003வரை அதனை ஏற்காமல் இருந்துவந்தது சீன அரசாங்கம். சிக்கிமை இந்தியாவிற்கு வெளியே இருப்பதை போன்றே வரைபடத்தை வெளியிட்டு வந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2004ல் சீனா சென்றபோது சிக்கிம் இந்தியாவின் அங்கம்தான் என அங்கீகரித்தது. இந்த நிலையில் இந்தியா -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டபோதுதான் இந்தியா-சீனா முரண்பாடு வேகம் பெறத்தொடங்கியது. இந்த ஒப்பந்தமானது தெற்காசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தின் இளைய பங்காளியாக இந்தியா சேவையாற்றி தனக்கு எதிராக ஊறுவிளைவிக்கும் என சீன அரசாங்கம் கருதத்தொடங்கியது. அது உண்மையும் ஆகும். அதன் பிறகுதான் சீனா நாம் மேலே பார்த்த அரங்குகளில் இந்தியாவுடன் தீவிரமாக முரண்படத் தொடங்கி குறிப்பிட்ட அளவில் வெற்றியும் பெற்றுவருகிறது.
இந்தியா அண்டை நாடுகளில் மேலாதிக்கம் செய்துவந்து தனிமைப்பட்டு உள்ளதால் அது சீனாவுக்கு சாதகமாகவும் உள்ளது. இதனால் பாகிஸ்தானை மேலாதிக்கம் செய்து தோற்றுவந்த இந்தியாவானது இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றுடன் முன்பு இருந்தாற்போல் மேலாதிக்கம் செய்ய முடியாமல் உள்ள நிலையில்அந்த நாடுகள் சீனாவுடன் மூலஉத்திரீதியான நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளன. மேலும் அமெரிக்காவானது பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிக்கி உள்ளதால் அந்தக் காரணியும் சீனாவுக்கு சாதகமாகிவிட்டது.
இனி மைய விஷயத்திற்கு வருவோம். இந்தியா- சீனா முரண்பாட்டின் முதலாவது அபாயகரமான புரிதல் சீன எதிர்ப்பிலான இந்தியதேசிய வெறியை ஊட்டுவது ஆகும். இது அண்மைக் காலமாக அதிகரித்து சீனா 2011ல் இந்தியா மீது போர் தொடுக்கும் என பூச்சாண்டி காட்டும் அளவுக்கு சென்றுள்ளது. இதன் நோக்கமானது இந்தியா-சீனா முரண்பாட்டை தீர்ப்பதற்கு இந்தியா போரைத் தொடுக்க வேண்டும் என்பதற்கு இந்தியாவில் உள்ள மக்களை தயார் செய்யவேண்டும் என்பதாகும். இதன் மூலம் இந்தியாவின் நேரடி நலனும் அதன் எஜமானன் அமெரிக்காவின் நலனும் பாதுகாக்கப்படும் என்பதற்காகவே இந்தப் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
இந்தப் பூச்சாண்டியை வலதுசாரிகளே மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் சில பலன்களை அடையலாம் என அவர்கள் எண்μகிறார்கள் முதலாவதாக பொருளாதார பலன், அடுத்தது அரசியல் அரங்குகளிலும் பலன்கள் உள்ளன. ஒன்று இந்திய ஆளும் வர்க்கத்தின் மீதான கோபம் சீன எதிர்ப்பிலான இந்திய தேசிய வெறியாக திருப்பப்படும். அடுத்தது சிபிஐ, சிபிஎம் முதல் மா-லெ அமைப்புகள் வரை அரசியல் அரங்கில் ஓரங்கட்டப் பட முடியும் என எண்ணுகிறார்கள்.
ஏனெனில் சிபிஐ, சிபிஎம் ஆகியன சீன அரசாங்கத்தின் பக்கமே நிற்கும். மா-லெ அமைப்புகள் இரண்டு அரசாங்கங்களுக்கும் எதிராக நிற்கும். எனவே இந்த அமைப்புகளை சீன ஏஜெண்ட்டுகள் என முத்திரை குத்தி சீன எதிர்ப்பிலான இந்திய தேசிய வெறியில் மூழ்கடித்து விடலாம் என நப்பாசையில் இருக்கிறார்கள். அமெரிக்கா எல்லா அரங்குகளிலும் இந்தியாவை மேலாதிக்கம் செய்து ஆட்டுவித்துவந்தாலும் இந்த வலதுசாரிகள் அமெரிக்காவோடு இந்தியா இணக்கமாக போகவேண்டும்; அப்பொழுதுதான் இந்தியாவின் நலன் பாதுகாக்கப்படும்; அமெரிக்க எதிர்ப்பு என்பது எதற்கும் உதவாத வெற்று வாய்ச்சவடால் என்றே கூறிவருகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். இவர்கள் அமெரிக்க எடுபிடிகள் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. இந்த எடுபிடிகள் அமெரிக்காவின் நலனுக்காகவே இந்தியா-சீனா முரண்பாட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா-சீனா முரண்பாட்டின் அபாயகரமான இரண்டாவது புரிதல் என்பது இந்த முரண்பாட்டை பயன்படுத்தி ஈழச்சிக்கலினை தீர்க்க எத்தனிப்பது ஆகும்.
நெடுமாறன் இதைப் பேசுகிறார். மே 18க்கு முன்பும் இதே அடிப்படையில் பேசினார். அப்பொழுது சீனாவுடன் பாகிஸ்தானையும் சேர்த்துக்கொண்டார். இவர் மட்டும் இவ்வாறு பேசவில்லை. ராமதாசும், வைகோவும், திருமாவளவனும், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் இதையே வழிமொழிந்தனர். ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, இதே அடிப்படையிலான அணுகுமுறையில்தான் இந்தியாவின் பாதுகாப்பு கருதி இலங்கைக்கு உதவி செய்வதாகவும் இல்லாவிட்டால் சீனாவும் பாகிஸ்தானும் உதவி செய்து இலங்கை அரசாங்கத்திடம் நெருங்கிவிடுமென்று பேசியே இலங்கைக்கு உதவி செய்வதை நியாயப்படுத்தி செயற்படுத்தினர்.
இப்போது மீண்டும் அவர் தினமணியில் 17.6.2009 அன்று எழுதியே விட்டார். இந்தியா ஈழ மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டு கேட்டு ஓய்ந்து பாதுகாப்பு மைய (security-centric) அணுகுமுறையை காட்டியாவது இந்திய ஆட்சியாளர்களை இணங்கவைக்க முடியுமா என்ற தவறான எதிர்பார்ப்பில் கேட்கிறார். அதில் சீன எதிர்ப்பிலான இந்திய தேசிய வெறியே வெளிப்படுகிறது.
முத்துக்குமார் நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் வெளிவந்த ‘சீனாவின் முற்றுகையில் இந்தியா’ என்ற நூலிலும் இந்தத் தொனியே மேலோங்கி நிற்கிறது. இந்தத் தவறான அμகுமுறையினால் ஈழ மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் இந்தியா பாதுகாப்பு மைய அணுகுமுறையினால் ஒருக்கால் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்து பிறகு திடீரென்று அதே அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதும் அல்லது அவர்களை நசுக்குவதுதான் நல்லது என தலை கீழாகவும் முடிவை எடுக்கலாம். இந்தியா-சீனா முரண்பாடு தவறான புரிதலினாலும் தவறான காரணத்தினாலும் இவ்வாறு கொம்பு சீவப்பட்டுக் கொண்டிருக்கிறது.’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக